ஐக்கியமாகச் செயற்பட தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் இணக்கம் – நாளை மதியம் கொழும்பில் கூட்டாக அறிவிப்பு.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பிரதான ஆறு கட்சிகள் தமது மக்கள் எதிர்நோக்கும் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது சம்பந்தமான இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றன. அந்த இணக்கப்பாடு குறித்து அவை ஆறும் சேர்ந்து கூட்டாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாளை திங்கட்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கொழும்பு – கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெறுகின்றது.

இதில் அந்த ஆறு கட்சிகளினதும் தலைவர்களும் ஒரே மேசையிலிருந்து தங்கள் கூட்டுச் செயற்பாட்டுக்கான இணக்கப்பாட்டையும் அது தொடர்பான திட்டங்களையும் நாளை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் தரப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, மலையகத் தமிழர்கள் தரப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம்கள் தரப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவே ஒன்றுபட்டுச் செயற்பட இணங்கியிருக்கின்றன.

பிரதான எதிரணிக் கூட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஐக்கிய செயற்பாட்டுக்கு இணங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டு அமைப்புக்கு பெயர் ஏதும் உண்டா என்று கேட்ட போது –
”இப்போதைய நிலையில் இது ஒரு கூட்டு அமைப்பல்ல. ஒன்றுபட்டு விடயங்களை எதிர்கொள்வதற்கான இணக்கப்பாடு மட்டுமே. அதனால் அதற்கு விசேடமான பெயர் ஒன்றுமில்லை.” – என்று இந்த ஏற்பாட்டுக்குப் பின்னணியில் செயற்படும் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.