சிறைச்சாலை அதிகாரிகளின் மரணத்தால் தேசமே அதிர்ச்சி! – திலித் ஜயவீர எம்.பி. கவலை.
இலங்கையின் 146 ஆண்டு கால சிறைச்சாலை வரலாற்றில், கைதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெற்றதில்லை என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
காலியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார்.
அரசாங்கத்தின் பிழையான அரசியல் அணுகுமுறைகள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த அரச கட்டமைப்புமே சீர்குலைந்து, நாடு ஒரு ‘சட்டமற்ற நிலையை’ நோக்கித் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
“சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் என்ற முக்கிய பதவிக்கு ஓராண்டுக்கும் மேலாக நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்படாமல் இருந்தது, முறையான தலைமைத்துவமின்மையை வெளிப்படுத்துகின்றது. இதன் விளைவாகவே அப்பாவி அதிகாரிகள் தங்கள் உயிர்களை இழக்க நேரிட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாகப் பதவியில் இருந்த சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், செய்யாத தவறுக்காக அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு அநியாயமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டமையை அவர் விமர்சித்தார். அவர் நடத்தப்பட்ட விதம் மனிதநேயமற்றது என மனித உரிமைகள் ஆணைக்குழுவே சுட்டிக்காட்டியுள்ளது என்று தெரிவித்த திலித் ஜயவீர எம்.பி., இவ்வாறான நிர்வாக நடவடிக்கைகள் அரச கட்டமைப்பின் வீழ்ச்சியை உறுதிப்படுத்துகின்றன என்றார்.
அரசின் கடுமையான ஒடுக்குமுறைப் போக்குகளுக்கு அஞ்சி, எதிர்க்கட்சிகள் தற்காப்புப் பயத்துடன் அரசியல் செய்து வருகின்றன என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
“சிறு போக்குவரத்து விதிமீறலுக்குக்கூட அரசு தங்களைப் பழிவாங்கிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அரசியல் வீரியம் குறைந்துவிட்டது. தற்போதைய சூழலில் நாட்டின் ஜனநாயகப் பண்புகளையும், சமூக அமைதியையும் பாதுகாப்பது அனைத்து அரசியல்வாதிகளின் முதன்மைக் கடமையாகும்” என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
நாட்டின் கல்வி, நீதி, சுகாதாரத் துறைகள் என அனைத்து முதன்மைத் துறைகளும் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டைச் சீராக இயக்குவதற்கான குறைந்தபட்ச மாற்றங்களையாவது அரசு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
