வரலாற்றில் முதல்முறையாக நீதித்துறை அதளபாதாளத்தில் – திலித் ஜயவீர எம்.பி. எச்சரிக்கை.

இலங்கையின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு பலவீனமடைந்து, சீர்குலைந்துள்ளது என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் உதார ஜயவீரவின் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார்.

“சர்வஜன அதிகாரம் கட்சியானது, நாட்டில் நிலவும் உண்மையான அரசியல் வெற்றிடத்தை நிரப்பி, ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே ஆரம்பிக்கப்பட்டது. அநியாயமாக இழக்கப்பட்ட நாட்டின் ஆற்றல்களையும் வளங்களையும் மீண்டும் கட்டியெழுப்பி, நாட்டு மக்களுக்கு ஒரு சரியான திசையைக் காட்டுவதே எமது பயணத்தின் இலக்காகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் மாத்திரமல்லாது, சமூக, கலாசாரக் கட்டமைப்புகளும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய திலித் ஜயவீர, நீதித்துறையின் தற்போதைய நிலை குறித்தும் கருத்து தெரிவித்தார்.

“நீதித்துறையின் சுயாதீனத்தன்மை சீர்குலைந்து போயுள்ளது. இது குறித்து நீதித்துறையில் பணியாற்றும் சட்டத்தரணிகளும், நேர்மையான நீதிபதிகளும் கொண்டுள்ள கருத்து மிகவும் தெளிவானது. அதேபோல், சட்டம் ஒழுங்கு, பொலிஸ் துறை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை மிக வேகமாகச் சீர்குலைந்து வருகின்ற ஒரு காலகட்டத்தையே நாம் எதிர்கொண்டுள்ளோம்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க, நிலைமைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.