நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு – மேலும் இரு சிறைக்காவலர்கள் உயிரிழப்பு.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை மோதல்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு சிறைச்சாலைக் காவலர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளையில் மேற்படி இரண்டு சிறைக்காவலர்களும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பயங்கர மோதல்களில், இதுவரை 10 சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளும், 21 கைதிகளுமாக மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கொடூர மோதலில் காயமடைந்த ஏனைய கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
