காரைநகரில் வெளிநாட்டவர்களின் வீடுகளைக் குறிவைத்துத் திருட்டு! – களவாடப்பட்ட பொருள்களுடன் இருவர் கைது.

யாழ். காரைநகர் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து தங்கியிருந்தவர்களின் வீடுகளை இலக்கு வைத்துத் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், இரு இளைஞர்கள் யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உள்ள இரு வீடுகளில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர். முதலாவது வீட்டில் 1,600 கனேடிய டொலர்கள், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும், இரண்டாவது வீட்டில் 400 யூரோக்கள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணம் என்பனவும் திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய, யாழ். மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர்.

அந்த விசாரணைகளின் அடிப்படையில், காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.