நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அடியோடு ஒழிக்க அரசு முன்வர வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் வலியுறுத்து.

ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தில் தலையிடுவதைத் தவிர்த்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க அரசு முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியன ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் என்றும், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறை மிக முக்கிய வகிபாகத்தை ஆற்றி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீன ஊடகங்களும், சிவில் சமூகமுமே ஏனைய இரு முக்கிய தூண்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழலில், தற்போதைய அரசு நீதிமன்றத்துக்குப் பாரிய அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிலவும் நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்பாது விடுதல் போன்ற செயற்பாடுகள் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் சவால்கள் என்றும் தெரிவித்தார்.

நீதியரசர்களை நியமிக்காது வெற்றிடங்களை வைத்திருப்பது நீதிமன்றத்தின் மீதான மறைமுக அழுத்தமாகும் என்று குறிப்பிட்ட அவர், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை நிலைநாட்ட ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் உறுதியுடன் இருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“ஜனநாயகத்தையும் நீதிமன்றத்தையும் சீர்குலைக்காது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கக் கூடிய புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதே தற்போதைய தேவையாகும். மக்கள் எமக்கு வழங்கிய ஆணையும் ஜனாதிபதி முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கே ஆகும். இந்த மக்கள் ஆணையை நிராகரிப்பது, மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.