செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய அரசு பூரண ஒத்துழைப்பு வழங்கும்! – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காணாமல்போனோர் தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிவதற்கு, அரச தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறினார்.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தற்போதைய அரசின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனைத்து மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதி என்பதைச் சுட்டிக்காட்டினார்.

வரலாற்றில் முதன்முறையாக இந்த அரசுக்கு வடக்கு மக்களிடமிருந்து பலத்த ஆதரவு கிடைத்துள்ளது என்றும், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல வழிகளிலும் நல்லிணக்கத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் தெற்கு என இரு தரப்பிலும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாது பெற்றோர் இன்றும் கண்ணீர் வடிக்கும் நிலை நீடிக்கின்றது என்று குறிப்பிட்ட நீத்து அமைச்சர், அந்த வேதனையைத் தீர்க்க அரசு முன்னுரிமை அளிக்கின்றது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் ஆட்சிக்கு வரும்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் போதிய ஆளணி வளம் இருக்கவில்லை. நாம் உடனடியாகப் புதிய ஆட்சேர்ப்புகளைச் செய்து 60 பேரை அதில் இணைத்துள்ளோம். இதற்கென வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது தலா மூன்று பேர் கொண்ட 15 விசாரணைப் புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், நிலுவையிலுள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

செம்மணி விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், அது போன்ற சம்பவங்களில் உண்மையை வெளிக்கொணரவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்றும், அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.