வவுனியாவை அச்சுறுத்தும் டெங்கு நோய் – கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை.

வவுனியா மாவட்டத்தில் டெங்குத் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் துரிதமாகக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்த கலந்துரையாடல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மாவட்டத்தில் நிலவும் டெங்கு நிலைமை குறித்து விளக்கமளித்த பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

“வவுனியா மாவட்டத்தில் இதுவரை 67 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறிப்பாக, வவுனியா நகரப் பகுதிகளைச் சூழ டெங்குத் தொற்று வேகமாகப் பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. முறையற்ற கழிவகற்றல் மற்றும் நீர் தேங்கி நிற்கும் இடங்களே நுளம்புகள் பெருகுவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.” – என்று குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறையினரின் தரவுகளின்படி, வவுனியா தெற்கு, வெண்கலசெட்டிகுளம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே டெங்குத் தொற்று அதிகளவில் பதிவாகியுள்ளது.

டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை வவுனியா மாவட்டம் முழுவதும் முன்னெடுப்பதற்கு இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய, அரச நிறுவனங்கள், பாடசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் நா. கமலதாசன், முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.