ஊழல்வாதிகள் எவரும் தப்பிக்கவே முடியாது! – சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அமைச்சர் சந்திரசேகர் திட்டவட்டம்.

வடக்கு மாகாணத்தில் இடம்பெறும் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எவராயினும் அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சினால், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட உதவித்திட்டங்களின் முதற்கட்ட நிகழ்வு, இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 130 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்குத் தையல் இயந்திரங்கள் மற்றும் ஆடு வளர்ப்புற்கான வாழ்வாதார உதவிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்பான துல்லியமான தரவுகளைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என்று இதன்போது குறிப்பிட்ட அமைச்சர், எதிர்வரும் ஆண்டில் அரசு வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கவுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய அமைச்சர், “இலஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான அரசே இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொதுப்பணக் கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் எவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. எதிர்காலத்தில் மாவட்ட ரீதியாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன. எனவே, மோசடிகள் குறித்து மக்கள் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்” என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், அரசு எவ்விதப் பாகுபாடுமின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்கின்றது என்றும், சட்டத்தை அமுல்படுத்தும்போது தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம. பிரதீபன், உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.