துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன உயிரிழப்பு! – தன்னைத் தானே சுட்டுக்கொண்டாரா? மரணம் தொடர்பில் தீவிர விசாரணை.

இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபரான சி.டி. விக்கிரமரத்ன (வயது 63), இன்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்கிரம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டமையால் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது நெஞ்சுப் பகுதியிலேயே துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.

பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியாலேயே அவர் இந்தச் செயலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

எனினும், இந்த மரணம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரும், மாலபே பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக சி.டி. விக்கிரமரத்னவின் உடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை பொலிஸ் துறையில் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராகப் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.