நகைச்சுவை வழங்கும் தரப்பாக மாறிவிட்டனர் எதிர்க்கட்சியினர்! – நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அமைச்சர் சமந்த வித்யாரத்ன விமர்சனம்.

எதிர்க்கட்சியினர் தற்போது நகைச்சுவை வழங்கும் தரப்பாக மாறிவிட்டனர் என்றும், நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கூட வெறும் நகைச்சுவை விடயங்களாக மாற்றியுள்ளனர் என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விடுத்து வரும் கருத்துக்கள் குறித்து ஊடகங்களுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:-

“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு நீதி அமைச்சர் பொறுப்பேற்றுள்ளமைதுடன், அது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், அந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டறியுமாறு எதிர்க்கட்சியினர் அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதற்குப் பதிலாக வெறும் பிரேரணைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகின்றனர்.

இதற்கு முன்னரும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்போவதாகக் கூறிவிட்டு, கடைசி வரை அதைச் சமர்ப்பிக்கவில்லை. அவ்வாறே தற்போதைய பிரேரணையும் வெறும் பேச்சுடன் முடிந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுகின்றது. எதிர்க்கட்சித் தரப்புக்கே தமது கட்சியின் மீதான நம்பிக்கை குறைந்துள்ள ஒரு சூழலே இன்று உருவாகியுள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.