கொழும்பில் சீனப் பிரஜைகள் மோதல்! ஒருவர் கடத்தப்பட்டுக் கொடூரக் கொலை!

கொழும்பு, கோட்டை துறைமுக நகரில் சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம், எஹலியகொடை – கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கொழும்பு, கோட்டை துறைமுக நகருக்கு மீன்பிடிக்க வந்த மூன்று சீனப் பிரஜைகள் மீது, மற்றொரு சீனப் பிரஜைகள் குழுவினர் தாக்குதல் நடத்தி ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளமையுடன், அவர்களது வான் வாகனத்தையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். அந்த வானிலிருந்து வாயுத் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஹலியகொடை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கரந்தனை – கேட்டுக்கடை காட்டுப் பகுதியில் கல் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் கண்டெடுக்கப்பட்டு, கொழும்பு துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜையினுடையது என உறுதிப்படுத்தப்பட்டது. சடலம் மேலதிக விசாரணைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சீனப் பிரஜைகள் நாட்டிலிருந்து தப்பியோட முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கரையோரப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறும், இலங்கையில் வசிக்கும் சீனக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சீனத் தூதரகம் இலங்கைப் பொலிஸாருக்குக் கோரிக்கை விடுத்துள்ளதுடன், சீனக் குடிமக்களையும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.