திருகோணமலை – ஹபரணை வீதியில் சோகம் கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசம்! – பிரபல வர்த்தகரின் மகன் பரிதாப உயிரிழப்பு.
திருகோணமலை – ஹபரணை வீதியின் கித்துள்ஊத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இந்தியச் சுற்றுலாப் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து ஹபரணை நோக்கி இந்தியச் சுற்றுலாப் தம்பதியினர் பயணித்த வான் ரக வாகனமும், ஹபரணையிலிருந்து கந்தளாய் நோக்கி அதிவேகத்தில் பயணித்த உயர்தர ரேசிங் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
மோதிய வேகத்தில் ரேசிங் மோட்டார் சைக்கிள் துண்டு துண்டாகச் சிதறி, சம்பவ இடத்திலேயே தீப்பற்றி முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான கந்தளாய் மற்றும் திருகோணமலை நகர்ப் பகுதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் பிரபல வர்த்தகரின் மகனான ஹயஷான் பத்திரன (வயது 21) உடனடியாகக் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வானில் பயணித்த இந்தியத் தம்பதியினரில் கணவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். காயங்களின்றி தப்பிய அவரது மனைவி தங்கியிருந்த விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கல்லோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



