சொந்த நிலத்தை மீட்கக் கோரி மயிலிட்டி மக்கள் 14 ஆவது வாரமாகத் தொடர்ந்து அறவழிப் போர்!

https://we.tl/t-YVeC8o0VdedUFGbe

https://we.tl/t-QrAgcOP75c7iEyFc

அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மயிலிட்டி மக்கள், அந்த நிலங்களை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் இன்று 14ஆவது வாரமாகத் தொடர்கின்றது.

மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்தில், வலிகாமம் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஜே/248, ஜே/251, ஜே/246 மற்றும் ஜே/255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுடன் அவர்களுக்கு ஆதரவாகப் பலரும் பங்கேற்றுள்ளனர்.

முன்பதாக நாட்டில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் சொந்த நிலங்களில் வாழ முடியாது இடம்பெயர்ந்த இந்தப் பகுதி மக்கள், இன்றுவரை நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் கடும் நெருக்கடிகளுடன் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், தங்களின் சொந்த நிலங்கள் இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டிருப்பது, தமது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதுடன், பூர்வீகமாக வாழ்ந்த சொந்த அடையாளத்தையும் இழந்துள்ள மக்களின் மனவேதனையை மேலும் அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த அரசால் விடுவிப்பதாக இணக்கம் காணப்பட்ட காணிகள் கூட, தற்போதைய அரசால் முழுமையாக விடுவிக்கப்படாமல் நிலங்களை அபகரிப்பதற்காக இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக மக்கள் கடும் விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.

தங்கள் சொந்த காணிகளை மீளப் பெற்று, கண்ணியமாக மீள்குடியேற விரும்பும் மக்களின் கோரிக்கைக்குத் தற்போதைய அரசு ஏமாற்றாமல் செவிசாய்க்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

“பொய்யான வாக்குறுதிகள் வேண்டாம்”, “இழப்பீடும் வேண்டாம்”, “எங்கள் நிலம், எங்கள் உரிமை” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களுடன் நில விடுவிப்பை வலியுறுத்தி மயிலிட்டி மக்கள் வீதிகளில் இறங்கி முன்னெடுக்கும் இந்தப் போராட்டம், அரச அதிகார வர்க்கத்தின் கவனத்தை ஈர்க்குமா அல்லது வழக்கம்போல் வெற்று வாக்குறுதிகளோடு முடிந்துவிடுமா என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.