ஓட்டோ விபத்தில் பெண் ஒருவர் பலி! – நால்வர் படுகாயம்.
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற ஓட்டோ விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், இரு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 01 பிரதான வீதியில், திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பயணிகளுடன் பயணித்த ஓட்டோ ஒன்று திடீரெனச் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் வவுணதீவுப் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகத் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த இரு குழந்தைகள் உள்ளிட்ட நால்வர் உடனடியாக மீட்கப்பட்டுத் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், காயங்களின் தீவிரத்தன்மை கருதி மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
திருக்கோவில் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
