இளம் தொழில்முனைவோருக்காக ஆயிரம் Q-SHOP திட்டம் ஆரம்பம்.

இளம் தொழில்முனைவோருக்காக ஆயிரம் Q-SHOP திட்டம் கௌரவ பிரதமர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

இளம் தொழில்முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் கியூ-ஷொப் திட்டத்தின் ஆரம்ப விழா, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் (19.11.2020) வியாழக்கிழமை இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்றது.

அதன்போது முதலாவது கியூ-ஷொப் விற்பனை நிலையம் கௌரவ பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டது.

உயர் தரத்திலான பொதுத்துறை மற்றும் உள்ளூர் தனியார் உற்பத்தியாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதன் மூலம் இளம் தொழில்முனைவோருக்கு இதன்மூலம் சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

இத்திட்டத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயிரம் கியூ-ஷொப்கள் ஆரம்பிக்கப்படுவதுடன், அதன் பின்னர் 2024ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் 14 ஆயிரம் கியூ-ஷொப்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன அவர்களின் எணணக்கருவிற்கமைய சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய மக்களுக்கு குறைந்த விலையில் உயர் தரத்திலான தயாரிப்புகளை விநியோகித்தல் மற்றும் போட்டி மிகுந்த இளம் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் ஆகியனவே இதன் பிரதான நோக்கமாகும்.

விளையாட்டுத்துறை அமைச்சின் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த திட்டத்திற்கு இளம் தொழில்முனைவோர் இணங்காணப்படுவர்.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கலாநிதி பந்துல குணவர்தன அவர்களினால் எழுதப்பட்ட ‘ஒபய் தெயே விருவா’ என்ற பாடல் அடங்கிய இருவெட்டு கௌரவ பிரதமருக்கு இதன்போது வழங்கப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் கங்காராம விகாராதிகாரி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன, விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், லசந்த அழகியவன்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply

Your email address will not be published.