செம்மணியில் 500 ஐ நெருங்கிய எலும்புக்கூடுகள்! – எழுந்தமானமாகக் குழிகளை வெட்டி ஆய்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று (மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 45ஆவது நாள் அகழ்வில்) புதிதாக 8 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 499 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, இதுவரை மொத்தம் 494 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்றைய அகழ்வின் போது சிறுவர் ஆடை ஒன்றின் பொத்தான் மற்றும் மூன்று நாணயக் குற்றிகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருள்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, செம்மணிப் புதைகுழியில் ஜி.பி.ஆர். ஸ்கான் செய்யப்பட்ட பகுதிகளில் எழுமாறாகக் குழிகளைத் தோண்டி ஆய்வு செய்யும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் நேற்று இரண்டு இடங்களில் முன்னெடுக்கப்பட்டன. இந்தக் குழிகளில் மனித என்புகள் அல்லது தடயப் பொருள்கள் ஏதேனும் அடையாளம் காணப்பட்டால், அடுத்த கட்டத் தொடர் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும்.

Leave A Reply

Your email address will not be published.