பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய பயணி அதிரடி கைது – மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை,

மும்பையை சேர்ந்த அனுஜ் என்ற பயணி, நேற்று காலை 8 மணியளவில் டெல்லி செல்வதற்காக மும்பை விமான நிலையம் வந்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு பணியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு மேலாளர் ஓம்பிரகாஷ் ஆகியோர் பயணியின் உடைமைகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது மேலாளர் ஓம்பிரகாஷ், பயணியிடம் “உங்கள் பையில் லைட்டர், கத்தரிக்கோல், நகவெட்டி போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா?” என்று விசாரித்தார். அதற்கு அந்த பயணி சற்றும் யோசிக்காமல், என் பையில் வெடிகுண்டு இருக்கிறது என்று விளையாட்டாக பதில் அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு மேலாளர், உடனடியாக அங்கிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் அனுஜை பாதுகாப்பு படையினர் அவரது உடைமைகளுடன் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அவரது உடைமைகளை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து நடத்திய தீவிர சோதனையில், சந்தேகப்படும்படியாக வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, பாதுகாப்பு விதிகளை மீறி வதந்தி பரப்பிய குற்றத்திற்காக அனுஜை பாதுகாப்பு படையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விமான நிலையங்களில் இதுபோன்ற விளையாட்டு தனமான பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.