பளையில் புலி முகாம் என்ற பெயரில் மாபெரும் நாடகம்! ஏழு முகவரிகளில் போலி மருத்துவர்; சபையில் அம்பலமான பகீர் பின்னணி.
கிளிநொச்சி – பளைப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் இருக்கின்றது என வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியதுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இந்த வதந்தியைப் பரப்பினார் எனக் கூறப்படும் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என்பவர் தற்போது கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தன்னை மருத்துவர் எனப் போலியாகக் காட்டிக் கொண்டுள்ளதுடன், மோசடி வழக்குகள் உட்பட மூன்று வெவ்வேறான குற்றவியல் வழக்குகளிலும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து, கிளிநொச்சியிலுள்ள குறித்த இடத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கு எல்.ரி.ரி.ஈ. பயிற்சி முகாம் இயங்கியதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும், அதுவொரு பயிர்ச்செய்கை நிலம் மட்டுமே என்பதும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
பளை வனவளத் திணைக்களத்துக்குரிய நிலத்தை விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியமை தொடர்பில் தியாகராஜா உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு, அவர்கள் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சோதனைக்குச் சென்ற விசேட அதிரடிப் படையினருக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட ஏழு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கிலும், சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கும் வகையிலுமே மேற்படி நபர் போலித் தகவல்களைப் பரப்பியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கோ அல்லது இன ரீதியான பிரிவினைகளைத் தூண்டுவதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது.” – என்று அமைச்சர் ஆனந்த விஜேபால திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
