‘சாகரிகா’ ரயில் மோதி ஓட்டோ சாரதி மரணம்! – மக்கள் போராட்டம்.
கடற்கரை வீதி ரயில் பாதையின் அலுத்கம, விகாரை ஒன்றுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
மருதானை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘சாகரிகா’ ரயிலுடன், ஓட்டோ ஒன்று மோதுண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் ஓட்டோவின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரயில் கடவையில் சமிக்ஞைகள் மற்றும் எச்சரிக்கை ஒலிகள் மட்டுமே உள்ளன என்றும், பாதுகாப்புக் கடவை இல்லாத காரணத்தினாலேயே தொடர்ச்சியாக இவ்வாறான விபத்துகள் இடம்பெறுகின்றன என்றும், அதிகாரிகள் அதற்கு எவ்வித தீர்வும் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டிப் பிரதேச மக்கள் ரயில் பாதையை மறித்து நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாகக் கடற்கரை வீதி ரயில் பாதையின் போக்குவரத்தில் பாரிய இடையூறு ஏற்பட்டது. பின்னர் பொலிஸார் தலையிட்டு, ரயில் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தேவையான தீர்வுகளை வழங்குவதாக அளித்த வாக்குறுதியின் பேரில் பிரதேச மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
அதன்பின்னர் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
