இனவாத, மதவாத மோதல்களுக்கு இலங்கையில் இனி இடமே இல்லை! – தேசிய மிலாதுன் நபி விழாவில் ஜனாதிபதி உறுதிமொழி.

எந்தவிதத்திலான இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இனி எப்போதுமே இலங்கையில் இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற 42ஆவது தேசிய மிலாதுன் நபி அரச விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சும், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

விழாவில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

“முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனைகளில் உள்ள விடுதலையின் அர்த்தம், அமைதிக்கான எதிர்பார்ப்பு மற்றும் மனிதநேயத்தை நனவாக்கக் கூடிய ஒரு பலமான அரசாங்கத்தை இந்நாட்டு மக்கள் இன்று இணைந்து கட்டியெழுப்பியுள்ளனர். நாட்டின் எதிர்காலம் மக்கள் சக்தியிலேயே முழுமையாகத் தங்கியுள்ளது.

நீண்டகால இனவாத மோதல்களால் வடக்கிலும் தெற்கிலும் நமது இளம் சந்ததியினர் பலியாகியுள்ளனர். கடந்த காலத் துயரங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, இனவாதத்துக்கும் மதவாத மோதல்களுக்கும் எமது நாட்டில் இனி எக்காரணம் கொண்டும் இடமளிக்கப் போவதில்லை.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற கோட்பாட்டுக்கு உயிர் கொடுக்கும் வகையில் அரசு செயற்பட்டு வருகின்றது. ஏழையோ, பணக்காரரோ அல்லது எத்தகைய அதிகாரமிக்கவரோ ஆவர், தவறு இழைத்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்ற நிலையை உருவாக்கி வருகின்றோம்.

நாட்டின் எதிர்கால சந்ததியினரை அச்சுறுத்தி வரும் போதைப்பொருள் அரக்கனையும், அதனுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கான இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.

இந்நிகழ்வில், கம்பஹா மாவட்டப் பள்ளிவாசல்களில் பல ஆண்டுகளாகச் சமயப் பணிகளை ஆற்றிய மௌலவிமார்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய மிலாதுன் நபி விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

2026 தேசிய மிலாதுன் நபி விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஞாபகார்த்த முத்திரை, கடித உறை, கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான நூல் மற்றும் நினைவு மலர் ஆகியவை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி டி.ஆர். ஹினிதும சுனில் செனவி, பிரதி அமைச்சர்கள், மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், மகா சங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.