ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இடமளிக்காமல் வெட்டிய அமைச்சர்கள்.

ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் இடைநடுவில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் வெளியேறியமை ஊடகவியலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து இன்று (26) யாழ்ப்பாணம் அரியாலையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்ததிருந்தனர்.

ஆரம்பத்தில் தனது கருத்தை இருபது நிமிடங்கள் வரை சிங்கள மொழியில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்தார். அதன் பின்னர் சிங்கள உரையின் மொழிபெயர்ப்பைத் தமிழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கினார்.
அதன் பின்னர் ஊடகவியலாளர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதில் வழங்கிய நிலையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் தமக்கு வேறு ஒரு பணி இருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறினர்.

ஆட்சிக்கு வர முதல் அடிக்கடி ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக சந்திப்புக்களை நடத்திய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பின்னர் எப்போதாவது இருந்து விட்டே ஊடக சந்திப்புக்கு அழைப்பர். அவ்வாறான நாளிலும் தங்களுடைய கருத்துகளை முன்வைத்து விட்டு ஊடகவியலாளர்கள் தங்கள் கேள்விகளை முன்வைப்பதற்குப் போதிய சந்தர்ப்பத்தை வழங்காமல் வேறு பணிகள் இருக்கின்றன எனக் கூறிவிட்டு சென்றமை ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.