மக்கள் மத்தியில் மீண்டும் பொய்களைக் கூறவே கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் தாக்கு.

மக்கள் மத்தியில் பொய்களை அள்ளிக் கொட்டி அதிகாரத்தைப் பெற்றுவிட்டு, மீண்டும் பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறுவதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடெங்கும் கூட்டங்களை நடத்த முயற்சிக்கின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர சீனிபுர பகுதியில் நேற்று நடைபெற்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது, தான் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் நிர்மாணித்த நெல் களஞ்சியசாலையையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த தேர்தல்களுக்கு முன்பு ஜனாதிபதி உள்ளிட்ட அரச அமைச்சர்கள் வயல்வெளிகளுக்குச் சென்று நெற்கதிர்களைக் கடித்துக் கொண்டு, ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகப் பிரஸ்தாபித்தனர். ஆனால், இன்று ஒரு கிலோ நெல் 120 ரூபாவுக்கே கொள்வனவு செய்யப்படுகின்றது. விவசாயத்துறை அமைச்சரே ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகின்றது எனத் தெரிவித்துள்ள நிலையில், விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு 17 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

நெல்லைக் கொள்வனவு செய்வதாகக் கூறினாலும், தற்சமயம் ஈர நெல் 85 ரூபாவுக்கும், காய்ந்த நெல் 100 ரூபாவுக்கும் அரசு வெறும் 2 முதல் 3 சதவீத அளவிலேயே கொள்வனவு செய்கின்றது. எஞ்சிய நெல்லைக் கொள்வனவு செய்யும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாட்டின் தேவைக்கு அதிகமாக அரிசி உற்பத்தி செய்யப்படும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 இலட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டொன் அரிசி வெளிநாடுகளிலிருந்து இறக்கமதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரிசி இறக்குமதியை எதிர்த்துப் பேசியவர்கள், இன்று அதனைச் செய்கின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் 30 முதல் 40 சதவீதமான மக்கள் வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அஸ்வெசும உதவித் திட்டம் வெட்டப்பட்டு வருகின்றது.

அரசு மக்களுக்குப் பொய் சொல்வதை விடுத்து, மின்சாரக் கட்டணத்தைக் குறைத்து, வரிச் சுமையைத் தளர்த்தி மக்களுக்கு உண்மையான நிவாரணங்களை வழங்க வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.