ஒரு மனிதன் அறிவிலும் சிந்தனையிலும் முழுமையடைய வாசிப்பு இன்றியமையாதது! – யாழ்ப்பாணத்தில் சர்வதேச புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைத்து ஆளுநர் வேதநாயகன் உரை.

ஒரு மனிதன் அறிவிலும் சிந்தனையிலும் முழுமையடைவதற்கு வாசிப்பு இன்றியமையாதது. அறிவைத் தேடும் பயணம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாகும். வாசிப்புப் பழக்கத்தை அடுத்த தலைமுறையிடம் வளர்ப்பதற்கு முன்னர், பெரியவர்களான நாமே வாசிப்பை எமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ‘யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா – 2026’ இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஒரு மனிதன் முழுமையடைவது வாசிப்பின் ஊடாகவே எனக் குறிப்பிட்டார். அறிவைத் தேடும் இந்தப் பயணம் ஒரு குறிப்பிட்ட வயதுடன் முடிவடைவதில்லை என்றும், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாகும் என்றும் தெரிவித்தார்.

வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அறிஞர் அண்ணா தொடர்பான நிகழ்வை நினைவுகூர்ந்த ஆளுநர், சத்திரசிகிச்சைத் தருணத்திலும் தாம் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிப்பதற்கு நேரம் கேட்ட சம்பவம், வாசிப்பு ஒருவரது வாழ்வில் எந்தளவு ஆழமான இடத்தைப் பெற முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டார்.

இன்றைய சமூக ஊடகச் சூழலில் நல்லவை, கெட்டவை, உண்மையானவை, பொய்யானவை எனப் பல்வேறு தகவல்கள் வேகமாகப் பரவி வருகின்றன என்று குறிப்பிட்ட ஆளுநர், சமூக ஊடகங்களில் நாம் வாசிக்கும் தகவல்கள் பெரும்பாலும் விரைவாக மறைந்து போகக்கூடியவை அல்லது மறக்கப்பட்டுவிடக்கூடியவை என்றார். அதற்கு மாறாக அச்சுப் புத்தகங்கள் நீண்ட காலத்துக்குப் பாதுகாக்கப்படக்கூடியதுடன், தேவையான எந்த நேரத்திலும் மீண்டும் எடுத்துப் படித்து பயன்பெறக்கூடிய நிலையான அறிவு வளங்களாகத் திகழ்கின்றன என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாபெரும் புத்தகக் கண்காட்சியை நடத்துவது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்ட ஆளுநர், பல்வேறு நூல்களையும் பதிப்பகங்களையும் ஒரே இடத்தில் ஒன்றிணைப்பதன் மூலம் வாசகர்கள் பல இடங்களுக்கு அலைந்து திரியாமல் தமக்குத் தேவையான நூல்களை எளிதாகத் தெரிவுசெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக, நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்துடன் இணைந்ததாக இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறுவது, பெருமளவான மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்கள் தமது வாசிப்புப் பழக்கத்தை மென்மேலும் வளர்த்துக்கொள்வதுடன், இதுவரை அறியாத புதிய விடயங்களைத் தேடிக் கற்றுக்கொள்வதற்கும் இத்தகைய நிகழ்வுகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், புத்தகங்களை வாங்குவது அல்லது வாசிப்பது என்பது வெறுமனே ஒரு தனிப்பட்ட பழக்கமாக அல்லாது, தனிமனித அறிவு வளர்ச்சிக்கும் சமூகத்தின் அறிவுசார் முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக அமையும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணம் மாநகர மேயர் மதிவதனி மற்றும் யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வாசிப்பு குறைகின்றது என்ற கவலையைத் தாண்டி, ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாசகர்களை உருவாக்குவதற்கான சூழலை நாம் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், அதற்கான முக்கியமான முயற்சியாக யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா அமைய வேண்டும் என்றும் ஆளுநர் வாழ்த்துத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.