பொரலஸ்கமுவ துப்பாக்கிச்சூட்டு வழக்கில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்.
கொழும்பு, பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் பல முக்கிய தகவல்களைப் பொரலஸ்கமுவ பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
‘கொஸ்மல்லி’ என்பவரின் காசாளரைக் குறிவைத்தே, பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கருதப்படும் ‘தெஹிவளை சண்டோ’ என்பவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. எனினும், துப்பாக்கிதாரிகளின் இலக்கு தவறியதன் காரணமாகக் காசாளரின் தந்தையே இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த 74 வயதுடைய முதியவராவார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகப் பொரலஸ்கமுவ பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளையும் மேலதிக விசாரணைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
