அறிவியல் பூர்வமான தரவுகளுடன் புதிய தேசிய இளைஞர் கொள்கை – அமைச்சர் சுனில் குமார் கமகே அறிவிப்பு.
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் நேரடித் தலையீட்டுடன், இளைஞர் அபிவிருத்தி குறித்த தேசிய மாநாடு மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் எந்தவொரு துறையிலும் உணர்திறன் மிக்க, அபிவிருத்தியடைந்த தேசியக் கொள்கைகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, அரசு என்ற ரீதியில் இளைஞர்களின் முன்னேற்றத்துக்காகப் பொறுப்புக்கூறக்கூடிய, அறிவியல் பூர்வமான கொள்கை ஒன்றை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
அரசின் கொள்கைப் பிரகடனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாகவே, இளைஞர் சமுதாயத்துக்கான புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் பணிகள் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய தேசியக் கொள்கையை வகுக்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக, இளைஞர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் உள்ளடக்கும் வகையில் 9 முக்கிய துறைகளின் கீழ் ஆராய்ச்சிப் பத்திரங்களைச் சமர்ப்பிப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெறுமனே கொள்கைகளை அறிவிக்காமல், பெறப்படும் இந்த ஆராய்ச்சிப் பத்திரங்களின் முடிவுகள் மற்றும் அறிவியல் பூர்வமான தரவுகளின் அடிப்படையிலேயே புதிய இளைஞர் கொள்கை தயாரிக்கப்படும்.
இளைஞர் சமுதாயத்தின் மறைந்திருக்கும் திறன்களை முறையாக அடையாளம் கண்டு, நாட்டின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அவர்களைத் தீவிரப் பங்காளிகளாக்குவதே இந்தத் தேசிய மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.” – என்றார்.
