இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமான எதற்கும் இடமளிக்கப்படாது! – அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரிடம் இலங்கை ஜனாதிபதி நேரில் வாக்குறுதி.

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பாதகமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தனது நிலப்பரப்பைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மேற்படி இருவருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன என்றும், இதன்போதே இந்த உறுதிமொழியை இலங்கை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீன ஆக்கிரமிப்பு மற்றும் இலங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் பீஜிங்கின் விரிவடைந்து வரும் ஆதிக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

38 ஆண்டுகளுக்குப் பின் இலங்கைக்கு இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட இந்தப் பயணத்தின் போது, இலங்கை விமானப்படைக்கான எல் – 70 ரக பீரங்கிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாடுகளின் தேசிய மாணவர் படையணி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையே ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்திய அரசின் மானியத்தின் கீழ் இலங்கையின் வான் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“பாரம்பரியமாக சுமுகமான உறவுகள் மற்றும் பரஸ்பர நம்பிக்கையால் வகைப்படுத்தப்படும், இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகக் கூட்டாண்மையின் முழு அளவிலான பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் ஆழமான கலந்துரையாடல்களை நடத்தினர்” என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான கடல்வழிப் பாதைகள், கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரம் மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்தல் ஆகியவை கூட்டுப் பாதுகாப்புக்கு அவசியமானவை என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு என்பது இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பைத் தீர்மானிக்கும் யதார்த்தம் என்று குறிப்பிட்டுள்ள அவர், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இணைந்து செயற்படவும் அழைப்பு விடுத்துள்ளார்.

“இலங்கை, இந்தியாவுக்கு ஒரு நட்பான அண்டை நாடு, நீண்டகால நண்பர் மற்றும் நம்பகமான கூட்டாளி. இந்தப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு குறித்த எந்தவொரு மூலோபாய உரையாடலுக்கும் இரு நாடுகளும் மையமானவை. வலுவான இந்தியா – இலங்கை கடல்சார் ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் கூட்டு வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு இன்றியமையாததாக இருக்கும்” என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை உறுதி செய்வதற்காக இந்தியாவுடன் இலங்கை இணைந்து செயற்படும் என்றும், இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து இணைந்து பயணிக்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.