யார் பிக்பொஸ் ? : கருணாகரன்

மூன்று வாரங்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவைச் சந்தித்திருந்தார். மூன்று கிழமைக்குப் பிறகு, இந்த வாரம் இலங்கைக்கான சீனத்தூதர் சி ஜிங்ஹோங் ஜனாதிபதியைச் சந்தித்திருக்கிறார்.

Pompeo says China has brought bad deals and lawlessness to Sri Lanka, South Asia News | wionews.comபொம்பியோ சீனாவுடனான இலங்கையின் உறவைப் பற்றியே அதிகமாகக் கவலைப்பட்டிருந்தார்.

“பொருளாதாரப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி இலங்கையைக் கடன் பொறிக்குள் சிக்க வைக்கிறது சீனா. நாங்கள் உங்கள் இறையாண்மையை மதிக்கின்றோம். உங்களுக்கு நல்லதைச் செய்ய விரும்புகின்றோம். அதே நேரம் சீனா உங்களை வஞ்சிக்கின்றது. அவர்கள் உங்களுடன் மோசமான உடன் படிக்கைகளைச் செய்து கொண்டு உங்களை ஏமாற்றுகின்றார்கள். அவர்கள் உங்களுக்கு சட்டமின்மையைத் தான் தர முயல்கின்றார்கள். அவர்கள் தன்னலத்துக்காகத்தான் உங்களைப் பாவிக்கின்றார்கள்.” என்ற பொருள்பட கொழும்பில் வைத்துச் சீனாவைக் குற்றம் சாட்டியிருந்தார் பொம்பியோ.

“We need investments: not loans” President tells Chinese Ambassador

“பொம்பியோ இப்படிச் சொல்ல முடியாது. சீனாவைச் சரியாக அவர் புரிந்து கொள்ளவில்லை. பொம்பியோ பழைய கதைகளையே பேசிக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவைப் போல சீனா பிற நாடுகளின் உட்பிரச்சினைகளில் தலையிடுவதில்லை. இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தொந்தரவு கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும்” எனப் பதிலடி கொடுத்திருந்தார் சீனத்தூதர்.

இந்தப் பனிமோதல் அமெரிக்கத் தேர்தல் விவகாரங்களோடு சற்றுத் தணிந்திருந்தது. இப்பொழுது அமெரிக்காவில் புதிய அதிபர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். புதிய அதிபர் பொறுப்புகளை ஏற்ற பிறகு 2021 ஜனவரியோடு மறுபடியும் இதைக்குறித்த வெளிப்படையான நிலைமைகள் தெரியும். அதுவரை அமெரிக்காவின் உள்நாட்டு நிலவரங்களைப் பொறுத்து ஒரு மந்த நிலையே காணப்படும்.

ஆனாலும் அமெரிக்கா போன்ற பெரிய வல்லரசுகளின் ஆட்சி மாற்றங்கள், தலைமைத்துவ மாற்றங்கள் போன்றவை வெளியுலக நடவடிக்கைகளிலும் வெளியுறவுக் கொள்கையிலும் பெரிய பாதிப்புகளை உண்டாக்குவதில்லை. என்றாலும் தலைமைத்துவ மாற்றங்கள் நிகழும்போது மெல்லியதொரு அவதான நிலை – சிறிய அளவிலான தந்திரோபாய மாற்றங்கள், அணுகுமுறை மாறுதல்கள் ஏற்படுவதுண்டு. அதற்கு சில மாதகால அவகாசம் தேவைப்படலாம்.

இந்தச் சூழலிலேயே இலங்கைக்கான புதிய சீனத்தூதருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

இன்றைய பூகோள அரசியல் பொருளாதார விரிவாக்கப் போட்டியில் இந்தச் சந்திப்புகளும் இவற்றின்போது பேசப்படும் விடயங்களும் முக்கியமானவை. இரண்டு வல்லரசுகளும் உலகை ஆளுகின்ற போட்டியில் பகிரங்கமாகவே ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் ஒன்றையொன்று மேவும் முயற்சிகளில் ஈடுபடுகின்றன. இதனுடைய வெளிப்பாடே ஏற்கனவே பொம்பியோ – சீனத்தூதர் இருவருக்குமிடையில் நடந்த சொற்போர்.

ஆகவே இந்த ஆதிக்கப்போட்டியில் ஒவ்வொரு தரப்பும் தமக்கு ஏற்ற விதமாக அழுத்தங்கள், தந்திரோபாய நடவடிக்கைகள், உதவித்திட்டங்கள், கடனுதவிகள், முதலீடுகள் என்று பல பொறிமுறைகளை வகுத்துச் செயற்படுத்துகின்றன என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

இவற்றைப் பயன்படுத்தியே சிறிய நாடுகள், உள்நாட்டு அரசியல் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் அரசாங்கங்கள், பொருளாதார நெருக்கடிக்குள்ளாகிய தேசங்கள் போன்றவற்றை இவை சுலபமாக தமது வலைக்குள் சிக்க வைக்கின்றன. அப்படியே இந்த நாடுகளின் மீது தங்களுடைய ஆதிக்கத்தை அல்லது செல்வாக்கை இவை பிரயோகிக்க முற்படுகின்றன.

இலங்கை உள்நாட்டு அரசியல் நெருக்கடி (ஜே.வி.பி – அரசு) இனப்போர் (அரசு – புலிகள்) போன்றவற்றினால் மிக மோசமான அழிவுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்துள்ளது. போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் முடிந்தாலும் பொருளாதார நெருக்கடியும் அரசியல் நெருக்கடியும் தீரவில்லை. சமூகங்களாகவும் இனங்களாகவும் பிளவுண்டு பலவீனப்பட்டுக் கிடக்கிறது நாடு. என்னதான் சிறப்பான அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கினாலும் குறைபாடுகள் பெருகிக் கொண்டே செல்கிறதே தவிர, முன்னேற்றத்தை எட்டுவது கடினமானதாகவே உள்ளது.

PM Modi announces $400 mn line of credit to Sri Lanka to strengthen economy, $50 mn to fight terrorismஇதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விளைகின்றன அமெரிக்காவும் சீனாவும். ஏன் இந்தியாவும்தான். ஆனால், சீனா அளவுக்கு அமெரிக்காவோ இந்தியாவோ இன்று பொருளாதார வளர்ச்சியோடில்லை. ஏனைய நாடுகளை விடச் சீன வளர்ச்சி துரிதமான ஏறுமுகங் கொண்டுள்ளது. கொவிட் 19 அமெரிக்கப் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவின் நிலைமையும் இதுதான்.

புதிய எந்தப் பொருளாதாரத் திட்டமும் இல்லாமல் இந்தியா அல்லாடுகின்றது என இந்தியப் பொருளியலாளர்கள் கவலைப்படுகிறார்கள். அதிகம் ஏன் இந்தியாவை விட வங்காள தேசம் பொருளாதார வளர்ச்சியில் உயர்ந்திருக்கிறது என அவர்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்டு இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளரைக் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே ஒப்பீட்டளவில் சீனாவே பொருளாதாரப் பலத்தில் முன்னணியில் நிற்கிறது. ஆனால், சீனா இதுவரையிலும் இலங்கைக்கு அதிகளவில் கடனுதவியையே செய்து வந்தது. ராஜபக்ஸக்கள் சீனாவிடம் கடனையே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டினை எதிர்த்தரப்பினர் பகிரங்கமாகவே கூறி வருவதை இங்கே நினைவூட்டலாம். ஊடகங்களின் அபிப்பிராயமும் ஏறக்குறைய இதுதான். இதனை மையப்படுத்தியே மைக் பொம்பியோவும் ஜனாதிபதியிடமும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் சீனா இலங்கையைக் கடன் பொறிக்குள் சிக்க வைக்கிறது எனக் கூறியதும்.

இப்பொழுது ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது புதிய சீனத்தூதர் வெளிப்படையாக எதையும் பேசியதாகத் தெரியவில்லை. ஒரு சம்பிரதாயச் சந்திப்புப் போலவே இது நடந்ததாகத் தெரிகிறது. ஆனாலும் இந்தச் சந்திப்பின்போது “இலங்கைக்குக் கடனுதவியை விட முதலீடுகளே வேண்டும். சீனாவிடமிருந்து அதையே எதிர்பார்க்கிறோம்” என்றிருக்கிறார் ஜனாதிபதி.

இது ஒரு முக்கியமான சேதியையும் அரசியல் திருப்பம் ஒன்றுக்கான சமிக்ஞையையும் சொல்கிறது. அமெரிக்காவோ இந்தியாவோ எதிர்க்கட்சிகளோ குற்றம் சாட்டுவதைப்போல நாம் சீனாவோடு கடன் உடன்படிக்கைகளில் ஆட்சி நடத்தவில்லை. பதிலாக உற்பத்திக்கான முதலீடுகளைப் பற்றியே சிந்திக்கிறோம். சீனாவையும் அந்த வழியில் திருப்ப முற்படுகிறோம். புதிய பொருளாதார நடவடிக்கைகளை முன்வைத்து இதைச் செய்கிறோம். இதை ஆரம்பிக்கிறோம் என்றவாறான செய்தி இது.

ஆனால் இது எந்தளவுக்குச் சாத்தியமானது? என்பதை உடனடியாக அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சீனத்தூதுவரும் இதைப்பற்றி எந்தப் பதிலையும் உடனடியாகச் சொல்லவில்லை. இது சீனாவின் பொருளாதாரக் கொள்கை, வெளிநாட்டு உறவாடல், ஆதிக்கச் செயற்பாடுகளுக்கு சவாலான ஒன்று. ஏனைய நாடுகளைத் தன்னில் தங்க வைப்பதை நோக்காகக் கொண்ட சீனாவுக்கு இந்த மாதிரி அறிவிப்புகளும் முடிவுகளும் பொருத்தமாக இருக்குமா? என்பது முக்கியமான ஒன்று.

ஆகையால் சீனா இதைக் குறித்து ஆழமாகச் சிந்திக்கும். இதற்கான பதிலை அது எப்படிச் சொல்லப்போகிறது? என்று பார்க்க வேண்டும். ஏனென்றால் சீன விரிவாக்கம் என்பது இலங்கை போன்ற பல நாடுகளை உள்ளடக்கியது. ஆகவே அது ஒரு விரிவான பொறிமுறையுடன் கூடிய வேலைத்திட்டம். அதில் தனியே இலங்கைக்கு மட்டும் என்றொரு பிரத்தியேகத் தயாரிப்பு இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும் நிலைமைக்கு ஏற்ப, சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சில மென் அசைவுகளைச் சீனா செய்யக் கூடும். எனினும் உடனடியாக சீனா இலங்கைக்குப் பதிலளிக்கும் எனக் கருத முடியாது.

மறுவளமாக பொம்பியோவின் கூற்றுக்கும் குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதியைக் கொண்டு சீனா முதலீடுகளைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது என்று நோக்கவும் இடமுண்டு. இனிமேல் கடனுதவிகளில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு தொடராது. பதிலாக முதலீட்டு உறவே தொடரும் என்பதாக.

இதை இன்னொரு விதமாகவும் வாசிக்கலாம். இதுவரையிலும் கடனுதவிகளைப் பெற்று வந்த இலங்கை இனிமேல் முதலீடுகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது என. சீனாவுக்கே இந்தச் செய்தியை இலங்கை கூற முற்பட்டுள்ளது என்றும் கொள்ள முடியும்.

2021 Budget: Government employees allowed to work after office hours –  North - East Today

அப்படியென்றால் இது தனியே சீனாவுக்கான அறிவிப்பு மட்டுமல்ல, ஏனைய நாடுகளுக்கான அறிவிப்பும்தான். புதிய வரவு செலவுத்திட்டத்தின்போதும் நிதி அமைச்சரும் பிரதமருமான மகிந்த ராஜபக்ஸவும் இதையே கூறியிருந்தார். மிக விரைவாகக் கடன்களை அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். முதற்கட்டமாக அதை ஆரம்பித்திருக்கிறோம் என.

ஆகவே அரசாங்கம் புதியதொரு பொருளாதாரக் கொள்கையை நோக்கிச் சிந்திக்கிறதா? புதிய பொருளாதாரக் கொள்கை என்பது சுயசார்புப் பொருளதாரம், உற்பத்திப் பொருளாதாரம் என்பதாக.

இதற்கு ஏனைய நாடுகள் எல்லாம் இணக்கம் தெரிவிக்க வேண்டுமே. தங்களுக்கான சந்தையை நோக்கிச் சிந்திக்கும் வல்லரசுகள் எப்படி சுய பொருளாதார உற்பத்தியை நோக்கிச் சிந்திக்கும் நாடுகளையும் அரசாங்கங்களையும் அங்கீகரிக்கும்?

இந்த நோக்கில் பார்த்தால் இலங்கையின் இன்றைய இந்த முடிவுகள் வல்லரசாளர்களுக்கு நிச்சயமாக இனிக்கப்போவதில்லை. ஆனாலும் இலங்கையின் புவியியல் அமைவிடமும் அதன் சூழமைவும் எடுத்த எடுப்பில் இவற்றை தீவிர எதிர் நிலைக்குத் தள்ளாது. பதிலாக தந்திரோபாய ரீதியாக இலங்கையைக் கையாளவே வைக்கும்.

இது இலங்கைக்கும் தெரியும். இன்று இந்தியா, சீனா, அமெரிக்கா என்ற மூன்று இழுவிசைகளுக்கு மத்தியில் இலங்கை உள்ளது. மூன்றுக்கும் இலங்கை தேவை. இலங்கையுடனான உறவு வேண்டும். இதையே இலங்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த விளைகிறது.

தமது கடந்த ஆட்சிக்காலக் கவனக்குறைவுகள் இனிமேல் நிகழக் கூடாது என்பதில் ராஜபக்ஸ தரப்பினர் விழிப்பாக இருப்பதாகத் தெரிகிறது. இதெல்லாம் நாட்டில் எத்தகையை விளைவுகளை உண்டாக்கப்போகிறது என்பதைச் சற்றுப் பொறுத்திருந்தால் காணலாம்.

ஆனால், ஒன்று, உள் நாட்டு நெருக்கடியே பிற நாடுகளின் ஆதிக்கத்துக்கு வாய்பாக எப்போதும் உள்ளது என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலாவது ஆட்சியிலிருப்போதும் பிறரும் புரிந்து கொள்ள வேண்டும். மக்களும்தான். இல்லையென்றால் தொடரும் நெருக்கடிகள் மேலும் அதிகரித்துக் கொண்டே தீரும்.நெருக்கடி என்பது எரியும் நெருப்புக்குச் சமம். அப்படி எரியும் நெருப்போடு எந்த விதமான வளர்ச்சியையும் காண்பது கடினம்.

Leave A Reply

Your email address will not be published.