வீதி விபத்துக்களில் ஐவர் பரிதாபப் பலி!
இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்த, ஹபரணை, அனுராதபுரம், மதவாச்சி மற்றும் ஹக்மனை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
கிரிந்த – திஸ்ஸமஹாராம வீதியின் விலமுல்ல பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கேக்கிராவைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹபரணை – கந்தளாய் வீதியின் அலுத்ஓய பகுதியில் கந்தளாய் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அஃபோபுரவைப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் – ரம்பேவ வீதியின் சாலியபுர பகுதியில் பஸ் ஒன்றை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள், அந்த பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பஸ்ஸின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாலியபுரவைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
ஹொரோவ்பதான – மதவாச்சி வீதியின் கிரிகல்வெவ பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் பயணித்த மூவர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மற்றொரு பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹக்மனை – கரதொட்ட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமிருந்த மின்சாரக் கம்பத்துடன் மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 20 வயதுடைய ஹக்மனைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துக்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
