மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் எம்.பி. பதவியைத் துறந்து போட்டியிடத் தயார்.
நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பினும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளைத் திறம்படச் செய்ய முடியாது என்றும், அதற்கு ஆட்சி அதிகாரமே அவசியம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு மண்டலமான பிங்கிரிய பகுதியில் 1,000 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் பிரதி அமைச்சராகத் தான் ஆற்றிய பங்களிப்பை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தம்மிடம் வேலை செய்யக்கூடிய உண்மையான திறன் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியில் இருக்கும்போது அதிகார வரம்புகள் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், அரசில் அதிகாரம் இருந்தால் மட்டுமே மக்களுக்கு முழுமையாகப் பணியாற்ற முடியும் என்றார்.
இதன் காரணமாக, மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வெறும் மாகாண சபை உறுப்பினராக இல்லாமல், முழுமையான அதிகாரமிக்க மாகாண முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றி மக்களுக்குச் சேவையாற்றுவதே தனது பிரதான இலக்கு என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
