மட்டக்குளியில் கோர விபத்து மூவர் சாவு; 12 பேர் படுகாயம்.

கொழும்பு – மட்டக்குளிப் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளமையுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்தக் கார், 3 ஓட்டோக்களுடனும், 4 மோட்டார் சைக்கிள்களுடனும் மோதியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஏனைய 12 பேரும் அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்குளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.