அலரி மாளிகை முடக்கப்படவில்லை ஊழியருக்குக் கொரோனா இல்லை பிரதமர் அலுவலகம் மறுப்பறிக்கை.

அலரி மாளிகை முடக்கப்படவில்லை
ஊழியருக்குக் கொரோனா இல்லை
பிரதமர் அலுவலகம் மறுப்பறிக்கை

அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானவை என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் பணியாற்றும் எந்தவொரு ஊழியரும் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிபடுத்துகின்றோம்.

கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக அலரி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது எனத் தேசிய நாளிதழொன்றில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானதும் ஆதாரமற்றதுமாகும்.

கொரோனா நிலைமைக்கு மத்தியில் அரசு மற்றும் சுகாதாரப் பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையின் நாளாந்தப் பணிகள் எவ்வித தடையுமின்றி முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையின் பணிகளுக்கென, ஏனைய அரச நிறுவனங்களை போன்று சேவைகளை நிறைவேற்றுவதற்கு அத்தியவசியமான மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், பஸில் ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்படும் ஜனாதிபதி செயலணியின் பணிகளும் எவ்வித தடையுமின்றி அலரி மாளிகை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுடன் தொடர்புடைய வெளிப்புறப் பிரிவினரே கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புப்பட்டுள்ளனர்.

பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகையில் கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் வழமை போன்று கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உறுதிபடுத்துகின்றோம்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.