185 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் மருத்துவ உத்தியோகத்தர் விடுதிக்கு அடிக்கல்! – சுகாதார அமைச்சர், வடக்கு ஆளுநர் பங்கேற்பு.

ஒரு மருத்துவமனையின் வளர்ச்சி கட்டடங்களை அமைப்பதோடு முடிவடைவதில்லை, மருத்துவ சேவையின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதைவிட முக்கியமாக, மருத்துவமனையின் மீது மக்களின் நம்பிக்கை வளர வேண்டும்.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

185 மில்லியன் ரூபா செலவில் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விடுதி, மருத்துவ உத்தியோகத்தர்கள் தாங்கள் பணியாற்றும் மருத்துவமனைக்கு அருகிலேயே பாதுகாப்பானதும் வசதியானதுமான தங்குமிட வசதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

மருத்துவ சேவைகளை வழங்கும் மருத்துவ உத்தியோகத்தர்கள், குறிப்பாக தமது குடும்பங்களை விட்டுத் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து பணியாற்றுவோர், உரிய தங்குமிட வசதிகளைப் பெற்றிருப்பது அவர்களின் மனநிறைவுக்கும் சேவையின் தொடர்ச்சிக்கும் முக்கியமானதாகும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் மாவட்டப் பொது மருத்துவமனைகள் மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்குவதால், அவற்றின் தேவைகள் மற்றும் பொறுப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக உள்ளன என்று குறிப்பிட்ட ஆளுநர், இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சு வடக்கு மாகாண மருத்துவமனைகளின் தேவைகளில் கவனம் செலுத்தி வருவது முக்கியமான ஆதரவாக அமைவதாகத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுகாதாரத் தேவைகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை வெறுமனே ஒரு மாகாணத்தின் கோரிக்கையாகக் கருதாமல், மக்களின் சுகாதார உரிமையுடன் தொடர்புடைய தேவைகளாகக் கருத்திற்கொண்டு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ செயற்பட்டு வருகின்றார் என்று தெரிவித்த ஆளுநர், அவருக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

ஒரு மருத்துவமனையின் தேவைகள் கட்டடம் ஒன்றை அமைப்பதோடு நிறைவடையாது என்று தெரிவித்த ஆளுநர், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தல், சிகிச்சைப் பிரிவுகளின் விரிவாக்கம் மற்றும் மருத்துவ சேவைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மருத்துவமனையின் உட்கட்டமைப்பும் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அந்தவகையில், கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையின் மருந்துக் களஞ்சியத்துக்காக 35 மில்லியன் ரூபா மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், அண்மையில் மருத்துவமனையின் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் தொடர்பில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை மற்றும் விரிவுபடுத்த வேண்டிய சிகிச்சைப் பிரிவுகளின் தேவைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, சிறிய அளவிலான கட்டடமொன்றை விட எதிர்காலத் தேவைகளுக்கும் ஏற்றவாறு அடுக்குமாடிகளைக் கொண்ட விரிவான கட்டடத்தை அமைப்பதே பொருத்தமானது என்று குறிப்பிட்ட அவர், அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் இந்தப் பணியை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ரகுராமன் தலைமையிலான குழுவினரால் முற்றிலும் இலவசமாக செயற்கை கருவூட்டல் சிகிச்சை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் ஆளுநர் தெரிவித்தார். இந்தச் சிகிச்சையைப் பெற்ற ஒரு தாய் தற்போது கர்ப்பம் தரித்திருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார். குறைந்த வளங்களைக் கொண்ட சூழலிலும் மருத்துவ அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை ஒன்றிணைந்தால் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இதனைத் தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறான சிறப்பான சேவைகளை வழங்கி வரும் மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்த ஆளுநர், அவர்களுக்கு தேவையான ஆதரவை சுகாதார அமைச்சர் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான விடுதிக்கான அடிக்கல் நடுகை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாகாண பெண்கள் சிறப்பு மருத்துவமனை மற்றும் செயற்கை கருவூட்டல் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பார்வையிட்டனர். பின்னர் மருத்துவ நிபுணர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இதன்போது கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையின் ஆளணி தேவைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதுடன், எதிர்வரும் காலத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆளணியினரை நியமிக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் அபேயசிங்க, ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டப் பொது மருத்துவமனையின் பணிப்பாளர், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள், தூய்மையான இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.