வங்கக் கடலில் தாழமுக்கம் 36 மணிநேரத்தில் புயலாகலாம்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் எதிர்வரும் 25ஆம் திகதி புயலாக மாறி கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இலங்கையில் வடக்கு கிழக்கு கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்வதுடன் சில பகுதிகளில 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைபெய்யக் கூடுமென்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதுடன் இன்னும் 36 மணி நேரத்தில் இது தொடர்பில் சரியான தரவுகள் தெரிவிக்க முடியும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

குறிப்பாக கிழக்கு மற்றும் வடபகுதி கடல் பகுதி சற்று கொந்தளிப்பாக காணப்படுவதுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்வது தொடர்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் சப்ரகமுவ மாகாணம் புத்தளம், காலி, மாத்தறை மாவட்டங்களில் கடும் மழை பெய்வதுடன் கிழக்கு வடக்கு மற்றும் வடமத்திய மாகாண பகுதிகளில் மணிக்கு சுமார் 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்றுடன் மழை பெய்யும் என்றும் ஏனைய பிரதேசங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் கடும் காற்று வீசக்கூடிய பகுதிகளில் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது

இதன் காரணமாக வடக்கு கிழக்கு மலையகம் உட்பட வடமேல் மாகாணம் மேல் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.