ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவது நீதித்துறைக்கு அச்சுறுத்தலாக அமையாது! – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆவேசம்.

நீதிமன்றக் கட்டமைப்பில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதும், ஊழல்வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் முறையான தண்டனை வழங்குவதும் எவ்விதத்திலும் நீதித்துறைக்கு அச்சுறுத்தலாக அமையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“கடந்த கால அரசுகள் நீதிமன்றக் கட்டமைப்பில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஏனைய நாடுகளில் 10 இலட்சம் பேருக்கு 41 நீதிபதிகள் உள்ள நிலையில், இலங்கையில் 10 இலட்சம் பேருக்கு 20 நீதிபதிகளே காணப்படுகின்றன. இந்த ஆளணி மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறையே வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்குக் காரணம்.

மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பற்றாக்குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றக் கட்டமைப்பை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சியில் இருக்கும்போது திருடர்கள் என்று குற்றம்சாட்டுபவர்கள், பதவிக்கு வந்தவுடன் அவர்களின் தோளில் கைபோட்டுச் செல்லும் வழக்கமான அரசியலைத் தற்போதைய அரசு முன்னெடுக்காது. ஊழல்வாதிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே ஊழலுக்கு எதிரான செயற்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்வார்கள்.

திருடர்களைச் சிறையில் அடைப்பதால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது என்ற எதிர்க்கட்சியினரின் வாதத்தை ஏற்க முடியாது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட இவ்வாறான கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.

நீதிபதிகளின் பதவிக் காலத்தை 2 ஆண்டுகளுக்கு அதிகரிப்பது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிரேஷ்ட மற்றும் அனுபவமிக்க நீதிபதிகளின் சேவையைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்கே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சர்வாதிகாரத்தை அமுல்படுத்தவோ அல்லது எவரையும் அச்சுறுத்தவோ 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகவே நீதிமன்றக் கட்டமைப்பை மறுசீரமைக்க இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்துக்காகவும், அரசின் மீது குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதற்காகவும் பொய்களையும் போலியான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றன. சிதறியுள்ள எதிர்க்கட்சிகளின் இத்தகைய குற்றச்சாட்டுக்களுக்கு நாம் எப்போதுமே கவனம் செலுத்தப்போவதில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.