22ஆவது திருத்தம் குறித்துச் சரியாகத் தெரிந்த 10 பேர் கூட எதிரணிப் போராட்டத்தில் இல்லை:! – சஞ்சய மஹவத்த கடும் சாடல்.

அரசமைப்பின் 22ஆவது அரசமைப்புத் திருத்தம் குறித்துச் சரியாகத் தெரிந்த குறைந்தபட்சம் 10 பேர் கூட எதிர்க்கட்சியினரின் தற்போதைய போராட்டங்களில் இல்லை எனவும், எதிர்க்கட்சியினர் மக்களின் நலனுக்காக அன்றித் தமது தனிப்பட்ட பிரச்சினைகளுக்காகவே வீதிக்கு இறங்கியுள்ளனர் எனவும் சிவில் புலனாய்வு முன்னணியின் தலைவர் சஞ்சய மஹவத்த குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் சிவில் புலனாய்வு முன்னணி நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“22ஆவது திருத்தச் சட்டமூலம் பற்றிச் சரியான புரிதல் இல்லாமல் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக கொழும்பு – பொல்துவ சந்தியில் கூடி கூச்சலிடுவதால் எந்தவொரு பயனும் ஏற்படப் போவதில்லை.

மேலும், இவ்வாறான போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் இயற்கை கூட ஒத்துழைக்காத சூழ்நிலையே காணப்படுகின்றது.

தற்போதைய அரசு நீதிமன்ற நடவடிக்கைகளை மிகவும் திறம்பட மாற்றியமைத்துள்ளதோடு, சட்டத்தின் ஆட்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே, கடந்த காலங்களில் தவறு செய்தவர்கள் தற்போது சிறைக்குச் செல்லப் பயந்து, சட்டத்தை வலுப்படுத்தும் புதிய சட்டமூலங்களுக்கு எதிராக இவ்வாறான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் பயணிக்கும் தற்போதைய அரசியல் மற்றும் ஆட்சிப் பயணம் மிகச் சரியான பாதையிலேயே அமைந்துள்ளது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.