நீதிமன்றத் தீர்ப்பைச் சவாலுக்குட்படுத்துவது பாரதூரமான விடயம்! – சஜித்துக்கு அரசு எச்சரிக்கை.
எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் யாவும் அவர்களின் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றது என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சவாலுக்கு உட்படுத்துவது மிகவும் பாரதூரமான விடயம். அது எந்தளவுக்கு நியாயமானது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உணர்ந்துகொள்ள வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்புக்கு அமைவாகவே நாடாளுமன்றத்தினுள் 22ஆவது திருத்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் போராட்டக்காரர்கள் மீது அரசு எவ்வித கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் பயன்படுத்தவில்லை.
ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவதற்கு எவருக்கும் உரிமை உள்ளதால் அதில் அரசு தலையிடாது.
எதிர்க்கட்சியினர் தங்களது போராட்டங்களை நடத்தட்டும், நாங்கள் நாட்டின் அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.
அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்மூடித்தனமாக எதிர்ப்புத் தெரிவிப்பது எதிர்க்கட்சியின் வேலையல்ல. நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பதே அவர்களின் பொறுப்பு.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் அரச சேவையைப் பரந்த அளவிலும் திறமையாகவும் விரிவுபடுத்தும் நோக்கில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரைப் புதிதாக இணைத்துக்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அரச சேவையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பான வேலைத்திட்டமொன்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மீளக்கட்டி எழுப்புவதற்கு அரசு பாரிய பங்கை ஆற்றியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிலர் ஏற்கனவே தண்டனை பெற்றிருந்தாலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் இருப்பார்களாயின் அவர்களுக்கும் தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.” – என்றார்.
