இலங்கையில் சாரதிகளுக்கான ‘குறைப்புப் புள்ளி முறைமை’ – ஒக்டோபர் 1 முதல் முன்னோடித் திட்டம் ஆரம்பம்.
இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய போக்குவரத்துச் செயற்றிட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, போக்குவரத்து விதிகளை மீறும் அனைத்துச் சாரதிகளுக்குமான ‘சாரதி குறைப்புப் புள்ளி முறைமை’ அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பான விசேட செய்தியாளர் சந்திப்பு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் பத்தரமுல்லை, கொஸ்வத்தையிலுள்ள ‘மகநெகும மகமெதுர’ அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தப் புதிய முன்னோடித் திட்டம் 2026 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் 2027 மார்ச் மாதம் வரை ஆறு மாத காலத்துக்குச் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்த ஆறு மாத காலத்தில் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய பாதுகாப்பு முறைமையுடன் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் போதிய அவகாசம் அளிக்கப்படவுள்ளது.
ஆறு மாத முன்னோடித் திட்டத்தின் முடிவில், வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 33 வகையான போக்குவரத்து வீதிமீறல்களுக்காக இந்தக் குறைப்புப் புள்ளி முறைமை சட்டப்பூர்வமாக முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை பொலிஸ், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், Lanka Pay, Gov Tech உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
இதற்கு இணையான நடவடிக்கையாக Gov-Pay தளத்தின் ஊடாக அரசுக்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் முறையும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் மாதத்தில் குருநாகல் மற்றும் அனுராதபுர வீதிகளை மையப்படுத்தி முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்ட இம்முறை, 2025 டிசம்பர் முதல் நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் Fintech செயலிகள் மூலமாக Gov-Pay ஊடாக எளிதாக அபராதத்தைச் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
“நாட்டில் வீதி விபத்துகளினால் ஆண்டொன்றுக்கு 2 ஆயிரத்து 750 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதைத் தடுப்பது அவசியமானது. இத்தகைய உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்களால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாரிய இழப்புகளைத் தடுக்க வேண்டும். ஒரு குடிமகனுக்குச் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது என்பது வெறுமனே உரிமையோ அல்லது சொத்தோ அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பாகும். சட்டத்தை மதிக்காமல் வாகனம் செலுத்துபவர்களை மட்டுமே பாதிக்கும் இத்திட்டம், டிஜிட்டல் உள்கட்டமைப்பின் கீழ் 2027 மார்ச் முதல் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வரும்.” – என்றார்.
இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அவந்தி சேனாரத்ன, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாரத்ன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க, Lanka Pay நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சன்ன டி சில்வா உட்படப் பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
