2027 ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும் – அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ அறிவிப்பு.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதுடன் நிதி ஒழுக்கமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. நாணய நிதியத்தின் செயற்திட்டப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அவற்றின் சாதகமான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்திப் பொருளாதாரக் காரணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், நாணய நிதியத்தின் செயற்றிட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் எதிர்மறையான கருத்துக்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படவுள்ளன. குறிப்பாகப் பெறுமதி சேர் வரி மற்றும் உழைக்கும்போது செலுத்தப்படும் வரிகள் கட்டம் கட்டமாகக் குறைக்கப்படும். அதற்குரிய யோசனைகள் வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும்.

நிறைவடைந்த இரண்டு ஆண்டு காலத்தில் அரசியல் ரீதியில் பிரபல்யமடையும் வகையிலான மக்கள் விரோதத் தீர்மானங்களை அரசு எடுக்கவில்லை. பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு அரச நிர்வாகத்தை முன்னெடுத்து வருகின்றோம். பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கப்போவதில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.