எரிபொருள் விலை உயர்ந்துள்ள போதிலும் மக்கள் மீது முழுச் சுமை சுமத்தப்படவில்லை – திறைசேரியின் நிதியைக் கொண்டு மானியம் வழங்கப்பட்டுள்ளது என்கின்றது ஆளும் தரப்பு.
எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், அதன் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல் திறைசேரியின் நிதியைப் பயன்படுத்தி மானியங்களை வழங்கியுள்ளதாக நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமைகளால் எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இதன் தாக்கம் எமது நாட்டுக்கும் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கான அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், விலை அதிகரிப்பின் முழுத் தொகையையும் மக்கள் மீது சுமத்தாமல், மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வரிக்கான நிதியைக் கவனமாகப் பயன்படுத்தி குறிப்பிட்டளவு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் வரியாகச் சேகரிக்கப்பட்ட பணத்தைத் திருடியமையுடன், ஊழல் மற்றும் மோசடிகளிலும் ஈடுபட்டனர். தற்போது நாட்டின் திறைசேரிக்கு நிதியைச் சேகரித்து அந்த நிதியை மீண்டும் மக்களுக்கே வழங்குவதற்குத் எங்களால் முடிந்துள்ளது.
வரிகளின் ஒட்டுமொத்த கட்டமைப்பை உடனடியாக மாற்றியமைக்க முடியாவிட்டாலும், வருமானம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அதனை மீண்டும் மக்களுக்கே வழங்கி வருகின்றோம்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்துக்கொண்டு எதிர்காத்திலும் மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.
