பொருளாதார முகாமைத்துவத்தில் என்.பி.பி. அரசாங்கமும் படுதோல்வி நாட்டின் வறுமை 65 வீதமாக உயர்வு என்றும் நாடாளுமன்றில் சஜித் பகிரங்க எச்சரிக்கை.

தற்போதைய அரசு பலவீனமான மற்றும் தோல்வியடைந்த பொருளாதார முகாமைத்துவத்தையே முன்னெடுத்து வருகின்றது எனவும், இதன் காரணமாக நாட்டின் 22 இலட்சம் மக்களும் எதிர்காலத்தில் பாரதூரமான பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நபர் ஒருவர் 30 நாள்கள் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 719 ரூபா போதுமானது எனக்கூறிக்கொண்டு, மத்திய வங்கியும் புள்ளிவிபரவியல் திணைக்களமும் வழங்கும் போலித் தரவுகளின் அடிப்படையில் அரசு செயற்படுகின்றது. உலக வங்கியின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 724 ரூபா தேவைப்படுவதால் நாட்டின் வறுமை 65.4 சதவீதமாக உள்ளது.

முந்தைய அரசின் நவ-தாராளவாதக் கொள்கையையே தற்போதைய அரசும் தொடர்கின்றது. படுகுழிக்கு இழுத்துச் செல்வது போல் வரிகளை விதித்து சமூகத்தில் அவலத்தை ஏற்படுத்தியுள்ள அரசு, மூளைசாலிகள் வெளியேற்றப்படுவதையும் ஊக்குவித்து வருகின்றது.

தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த புதிய சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்குச் செல்ல அரசு தவறிவிட்டது. மேலும், முறையற்ற கடன் முகாமைத்துவக் கொள்கைகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு இழந்துள்ளதுடன், தேவையற்ற விதிமுறைகளால் நேரடி வெளிநாட்டு முதலீடுகளும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன.

அரசு வழங்கும் உதவிகள் பெரும் செல்வந்தர்களுக்கும் கறுப்புப்பட்டியலில் உள்ள முயற்சியாண்மைகளுக்கே கிடைக்கின்றனவே தவிர, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்துறையினருக்கு முறையாகக் கிடைப்பதில்லை.

ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் 2 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட 2/3 சம்பளக் கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை.

37 வருட சேவையைப் பூர்த்தி செய்து ஓய்வுபெறும் நாடாளுமன்றப் படைக்கலச் சேவிதர் உபுல் சோமரத்னவுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.