வடக்கு, கிழக்கு, மலையக எம்.பி.க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட சந்திப்பு – மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவு.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இங்கு சமூகமளித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விவரங்கள் கேட்டறியப்பட்டன. குறிப்பாக, தற்போதைய பொருளாதார நிலைமையினால் மக்களின் வருமான மட்டம், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகக் குடும்பங்களின் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டன.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் காணப்படும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிக் குறைப்பாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வித் துறைகளில் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, தரமான சுகாதார சேவைகளுக்கான அணுகல், பாடசாலைக் கல்வியில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் குழந்தைகளின் போசாக்கு நிலைமை குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இது தவிர, 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. தற்போது காணப்படும் வரிச் சுமை தளர்த்தப்பட்டு, மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் ஒரு வரவு – செலவுத் திட்டத்தை தாம் எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ. இராதாகிருஷ்ணன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ். உதுமாலெப்பே, பத்மநாதன் சத்தியலிங்கம், முஜிபுர் ரஹ்மான் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
