ஈரான் கப்பல்களுக்கு உணவு, நீர் விநியோகத்தை தடுக்கும் உங்களுக்கு வெட்கமே இல்லையா? – அரசிடம் ஹக்கீம் கேள்வி.
“ஈரான் இலங்கைக்கு உதவி செய்த நாடு. அந்த ஈரானின் இருபது எண்ணெய்க் கப்பல்கள் இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் ஏறத்தாழ பதினைந்து கடல் மைல் தொலைவில் சிக்கி நிற்கின்றன். அவற்றுக்கான அத்தியாவசிய உணவு, நீர் விநியோகத்தை தடுக்கும் உங்களுக்கு வெட்கமே இல்லையா?” – என்று இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி.
நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய ஆவேசமான உரையிலேயே இந்தக் கேள்வியை அவர் எழுப்பினார்.
அந்த உரையில் ஹக்கீம் கூறியவை வருமாறு:-
“இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் ஏறத்தாழ பதினைந்து கடல் மைல் தொலைவில் இருபது ஈரானிய எண்ணெய் கப்பல்கள் சிக்கித் தவிப்பது அனைவரும் அறிந்த செய்தி.
இந்தச் சூழ்நிலை நிலையை எதிர்கொண்டு உடனடியாகத் தலையிடாது விட்டால், இது இலங்கைக்குக் கடுமையான அரசியல், பொருளாதார மற்றும் இராஜதந்திரத் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மிகக் கடுமையான மனிதநேயப் பேரழிவாக உருவெடுத்து விடும். ஆனால், அரசு என்ன அறிவிக்கின்றது?
இன்று, நேற்று மற்றும் ஞாயிறு பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளின்படி, “ஈரானியக் கப்பல்களுக்கு எவ்வித விநியோகமும் இல்லை என அரசு கூறுகின்றது”, “கப்பல்கள் இலங்கை கடல் எல்லைக்கு வெளியே சுமார் 25 கடல் மைல் தொலைவில் உள்ளன”, “ஈரானியக் கப்பல்களுக்கு விநியோகங்களை மறுப்பது தொடர்பாக அமெரிக்கா – இலங்கை உத்தியோகபூர்வ பேச்சு நடத்தின என வெளியான அறிக்கைகளை அமைச்சு நிராகரிக்கிஐ றது”என்றிருக்கின்றன.
முற்றிலும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிமையாகச் செயற்படும் ஓர் அரசாக நாம் இப்போது மாறியுள்ளோம். நாம் பெரிய அளவில் இந்தப்ப புரட்சியைப் பற்றிப் பேசியபோதும், தங்களின் இடதுசாரிக் கொள்கைகள் அனைத்தையும் அடகு வைத்துவிட்டு, இப்போது முற்றிலும் அமெரிக்கர்களுக்கும் டிரம்புக்கும் அடிமைகளாக இருக்கும் ஓர் அரசாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம்.
நமது வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், கடந்த செப்டெம்பர் இறுதியில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றியபோது என்ன விவரித்தார்? கடந்த “மார்ச் 26 ஆம் திகதி அன்று, நமது கடல் எல்லைக்கு அருகில் ஆபத்தில் சிக்கிக் கொண்ட ஈரானியக் கப்பலின் அவசர நிலைக்கு இலங்கை பதிலளித்தது. பல மாலுமிகளின் உயிர்கள் ஆபத்தில் இருந்தபோது, உணர்வுபூர்வமான சூழல்களைக் கையாண்டு, காயமடைந்தவர்களையும் நோயுற்றவர்களையும் மீட்டுப் பராமரிக்க எமது வரம்புக்குட்பட்ட தேசிய வளங்களைத் திரட்டி நாங்கள் கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தோம்.” – இதுதான் நமது வெளியுறவு அமைச்சர் தெரிவித்த பிரம்மாண்டமான அறிக்கை.
அவரது அறிக்கையின் முக்கிய செய்தி மனிதநேய உதவிக்கு அழுத்தம் கொடுப்பதாகும். மனித உயிர்கள் ஆபத்தில் இருந்தன, மனிதநேயம் குறித்த சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்டோம், எங்களது நடுநிலைமையைப் பாதுகாக்கும் அதே வேளையில் மனிதநேயத்தை மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக வைத்தோம் என்றார்.
அதுமட்டுமல்ல, அவர் இவ்வாறு கூறுகிறார்: “உலகின் முன் நாங்கள் கொண்டு வர விரும்பும் இலங்கை இதுதான். மோதல்கள் மற்றும் ஆழமான பிளவுகள் இருக்கும் காலத்திலும் மனிதநேயத்திற்கு இடம் உண்டு என்று நம்பும் பெரிய இதயத்தைக் கொண்ட ஒரு சிறிய தீவு இலங்கை. அதனை உலகிலும் பிரதிபலிப்பதாகக் காண நாங்கள் விரும்புகின்றோம். மனிதநேயத்தை அழிக்கும் எமது திறனை விட அதனை உயர்த்தப் பிடிக்கும் எமது திறன் வேகமாக வளரும் ஒரு உலகம் நமக்குத் தேவைப்படுகின்றது.” என்றார்.
இப்படி பெரிய பேச்சுகளைப் பேசிவிட்டு, அவர்கள் இப்போது என்ன செய்கின்றார்கள்?
தற்போது முற்றிலும் தலைகீழான காரியங்களைச் செய்கின்றார்கள். “எங்களுக்குப் பெரிய இதயம் இருக்கின்றது, நாங்கள் இந்த மனிதநேய நடவடிக்கையில் ஈடுபட்டோம், இவர்களின் உயிர்களைக் காப்பாற்றினோம்” என்று தம்பட்டம் அடித்தவர்கள் இப்போது என்ன செய்கின்றார்கள்? இப்போது அமெரிக்கர்கள் ஒருதலைப்பட்சமான தடைகளை விதித்து, “நீங்கள் இதற்குக் கீழ்ப்படியுங்கள்” எனக் கட்டளையிடுகின்றார்கள். அதற்கு அவதிப்பட்டு டிரம்பிடம் “யேஸ் சேர்” என்று கூறி, இந்தக் கப்பல்களுக்கு உணவைக் கொண்டு செல்லும் அனைத்து நிறுவனங்களுக்கும் இவர்கள் தடைகளை விதிக்கிறார்கள். இது என்ன அரசு? இப்படி நடந்து கொள்வது மன வேதனை அளிக்கின்றது. அமைச்சர்களே, வருத்தமளிக்கின்றது! இவற்றைச் சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமில்லையா?
இதை மிகப்பெரிய அளவில் போய்ப் பேசி விட்டு, அதுமட்டுமல்ல, இதைப் பாருங்கள். ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில், இவர்கள் முன்மொழிந்த ஒரு தீர்மானத்தில் கையெழுத்திட்டு, “2025 ஒக்டோபர் 3 ஆம் திகதி அன்று, நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில், ஒருதலைப்பட்சக் கட்டாய நடவடிக்கைகள் என உத்தியோகபூர்வமாக அறியப்படும் ஒரு தலைப்பட்சத் தடைகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை இலங்கை உலகுக்கு எவ்வித சந்தேகமுமின்றித் தெளிவுபடுத்தியது.”
அவ்வாறு,ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்திற்குச் சென்று “நாங்கள் இந்த ஒருதலைப்பட்சத் தடைகளுக்கு எதிரானவர்கள்!” என்று பெரிய அளவில் கூக்குரல் இட்டுவிட்டு வந்து, இப்போது இங்கே என்ன செய்கின்றார்கள்?
டிரம்பிடம் சென்று பயந்து நடுங்கி, “ஐயோ,எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள், நாங்கள் எதுவும் செய்யமாட்டோம்”என்று கூறிவிட்டு, எங்கள் நிறுவனங்களுக்கு “அங்கே கப்பல்களுக்கு போகாதீர்கள், உணவு கொடுக்காதீர்கள், அவர்கள் செத்து மடிந்தால் பரவாயில்லை” எனக் கூறி முகத்தைத் திருப்பிக் கொண்டு இருக்கிறீர்கள்.
ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராகப் பெரிய அளவில் துணிந்து நின்ற இந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான அரசு செய்வது இதைத்தானா? உங்களுக்கு வெட்கமில்லையா? இப்படிச் சென்று ஒப்பந்தங்களில் பெரிய அளவில் பேசிவிட்டு வந்து, முற்றிலும் தலைகீழான வேலைகளைச் செய்கின்றீர்கள்.
இப்போது இவர்கள் ஒரு விசித்திரமான நாடகத்தை ஆடுகின்றார்கள். அப்போது நிக்கோலஸ் மதுரோவிடம் சென்று பலவந்தமாக ஒரு நாட்டின் தலைவரைக் கடத்தினார்கள்.
கடத்தியபோது வெளியுறவு அமைச்சு “மீக்” (ஒரு வார்த்தை) கூடப் பேசவில்லை. யார் செய்கின்றார்கள்? பெலவத்தையில் ஜே.வி.பி. கட்சி அலுவலகத்திலிருந்து ஓர் அறிக்கையை வெளியிடுகின்றார்கள். பெலவத்தையிலிருந்து “அதனைக் கண்டிக்கின்றோம்” என்று அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆனால் அரசு வாய் திறந்து எந்தச் சத்தமும் போடவில்லை! “மீக்” என்ற சத்தம் கூட இல்லை!
பிரதி சபாநாயகரை ஈரானுக்கு தலைவரின் இறுதிச் சடங்குகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த நாட்டுத் தலைவரின் படுகொலை குறித்து நீங்கள் கண்டிக்கக் கூட இல்லை. அதற்கும் பயம். அதற்கும் பயம்!
இப்படிப்பட்ட கேவலமான, மலிவான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் ஓர் அரசையிட்டு நாங்கள் வெட்கப்படுகின்றோம். இப்போது இவற்றை நீங்கள் செய்யும்போது எங்களால் என்ன செய்யலாம்? நீங்கள் பெரிய அளவில் போய்ப் பேசிவிட்டு வந்து, நேற்றுமுன்தினம், இப்போது இவர்கள் செய்த வேலை என்ன?
“செப்டெம்பர் 9 – 11ஆம் திகதிகளில் நடைபெற்ற ‘இந்தியப் பெருங்கடலில் கடல்சார் தடைகளுக்குக் கீழ்ப்படிதலை வலுப்படுத்துதல் மற்றும் தடைகளைத் தவிர்க்கும் வலைப்பின்னல்களை எதிர்த்தல்’ பற்றிய மூன்று நாள் பயிலரங்கின் முடிவில் அமெரிக்க நிபுணர்களும் இலங்கை பங்கேற்பாளர்களும் ஒன்றுகூடியுள்ளனர்.
இந்தத் தடைகளுக்கு எவ்வாறு கீழ்ப்படிவது என்று பயிற்சி பெற நமது நாட்டினரை அனுப்புகிறார்கள். உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லையா?
ஈரான் எப்போதும் நமக்கு உதவி செய்த ஒரு நட்பு நாடு! ஒரு மனிதநேய நடவடிக்கை மேற்கொண்டோம் என்று பெரிய அளவில் பெருமை பேசிவிட்டு வந்து, இப்போது என்ன செய்கிறார்கள்? இங்குள்ள நிறுவனங்களிடம் “நீங்கள் கப்பல்களில் உள்ளவர்களுக்கு உணவு கொடுக்காதீர்கள்; தண்ணீர் கொடுக்காதீர்கள்; அந்தப் பக்கம் போகாதீர்கள்” என்று கூறுகின்றீர்கள்.
இந்த ஒருதலைப்பட்சத் தடைகளுக்கு எதிரான நாடு என்று கூறிய நாடு, அந்த உடன்படிக்கையில் இணைந்த நாடு, இப்போது என்ன செய்கிறது? முற்றிலும் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமைதியாக இருக்கின்றது.
அப்படியென்றால்,ஈரான், மினாப்பில் அந்தப் பாடசாலையில் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டபோது என்ன செய்தீர்கள்? ஒரு கண்டன அறிக்கையைக் கூட நீங்கள் வெளியிடவில்லை! உங்களுக்கு வெட்கமில்லையா? இது என்ன மாதிரியான வெளியுறவுக் கொள்கை? இதையிட்டு நாங்கள் கவலைப்படுகின்றோம்.
இந்த அரசின் நடவடிக்கையைக் கண்டு நாங்கள் உண்மையிலேயே வெட்கப்படுகின்றோம். குறைந்தபட்சம் ஜனாதிபதி தனது உரையில் மீதமிருந்த சில ஈரானிய மாலுமிகளை மீட்ட பிறகு எமது கடல் எல்லைக்குள் வர நாம் அனுமதிக்காதமையால் நூற்றுக்கணக்கானோர் இறந்து போனார்கள். அவர்களின் மரணத்திற்கு பங்களித்துவிட்டு, இறுதியாக ஜனாதிபதி ஒர் அறிக்கையிட்டார்.
எனவே அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மனிதநேய உதவியை வழங்குவது குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும். அதே வேளையில், நடுநிலைமையையும் மனிதநேயக் கோட்பாடுகளையும் நமது நாடு கடைப்பிடிக்கிறது என்ற செய்தியை உலகுக்குச் சொல்ல வேண்டும், மேலும் எமது பிராந்தியத்துக்குள் உள்ள நிலத்திலோ அல்லது கடலிலோ நிகழும் எந்தவொரு மனிதநேயப் பேரழிவுக்கும் எமது நாடு ஒருபோதும் உடந்தையாக இருக்காது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட ஏகாதிபத்தியவாதிகளுக்கும், “சர்வதேச பயங்கரவாதி”களுக்கும் முழந்தாளிட்டு நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம்! இந்த மனிதநேய நடவடிக்கைக்கு நாங்கள் முன்வருவோம் என்பதை காண்பியுங்கள். அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். அதைச் செய்துவிட்டு, செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேளுங்கள்.” – என்றார்.
