ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குக! – ஜனாதிபதி அனுரகுமாரவிடம் மொட்டுக் கட்சி வேண்டுகோள்.
நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தினார்.
அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அரசியல் பழிவாங்கலையே முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை பழிவாங்கும் நோக்கிலேயே இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அவரைக் கைது செய்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரை அரசு திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கி வருகின்றது. எனினும், அரசின் இவ்வாறான சர்வாதிகாரச் செயற்பாடுகளுக்கு நாம் அஞ்சப்போவதில்லை.
ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த அரசு சிங்கள பௌத்த மதத்துக்கு எதிராகச் செயற்படுகின்றது. இதற்குச் சிங்கள பௌத்த மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதன் பின்னரே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார். எனவே, வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் ஏதேனும் சட்டச் சிக்கல்கள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவருக்குபி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.” – என்றார்.
