மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்தத் திட்டம்! – அனைத்துக் கட்சிகளுடனும் ஆணைக்குழு பேச்சு.

நீண்டகாலமாகப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்துத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற விசேட செயற்குழுவுக்குப் பல முக்கிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் எனச் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள திருத்தப் பரிந்துரைகளுக்கு இணையாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தனது யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நீண்டகாலமாக மாகாண சபைகள் இயங்கி வருகின்றமை ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்பதால், நாடாளுமன்றச் செயற்குழு விரைந்து ஆராய்ந்து உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இயற்றப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் அம்சங்கள் பூர்த்தி செய்யப்படாதமையால், எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் சட்டச் சிக்கல் நிலவுகின்றது. எனவே, இது குறித்துத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளதுடன், நாடாளுமன்றத்தின் தீர்மானத்துக்குப் பின்னரே ஆணைக்குழு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும்.

பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பாகச் செயற்குழு முன்வைத்துள்ள விடயங்களைக் கருத்திற் கொண்டு அதற்குரிய பரிந்துரைகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானங்களை எட்டும் நோக்கில், எதிர்வரும் நாள்களில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.