நீதிமன்றத் தடை உத்தரவைத் தொடர்ந்து கலைந்து சென்ற பௌத்த பிக்குகள் – ஜனாதிபதி செயலக முற்றுகைப் போராட்டம் நிறைவு.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்திக் கொழும்பு – ஜனாதிபதி செயலகத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து பௌத்த பிக்குகளும் இன்று பிற்பகல் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.
அங்கிருந்து வெளியேறிய பிக்குகள், பௌத்த மற்றும் சமய விவகாரங்கள் அமைச்சில் நடைபெறும் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக, கொழும்பு – ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர் தங்கியிருப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன இன்று முற்பகல் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார். பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்தே, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகத் தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிக்குகள் அனைவரும் இன்று பிற்பகல் வேளையில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்திக் கண்டியில் கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான பிக்குகளின் ‘சுதந்திரத்துக்கான நடைபயணம்’ நேற்று மாலை கொழும்பை வந்தடைந்தது.
ஜனாதிபதி செயலக வளாகத்துக்கு முன்னால் திரண்ட பிக்குகள், நேற்று இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நேற்று மாலை ஆரம்பமான இந்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையிலேயே, நீதிமன்ற உத்தரவுக்கு அமையப் பிக்குகள் அங்கிருந்து வெளியேறியமையால் அந்தப் பகுதியில் நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துள்ளது.
