மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்து! – அநுர அரசை வலியுறுத்தி வவுனியாவில் போராட்டம்.

“அநுர அரசே, மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்து”, “நிரந்தர அரசியல் தீர்வை வழங்கு”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு”, “காணி உரிமைகளை உறுதிப்படுத்து” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இலங்கைக்கான சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்திடு!”, “13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்து!”, “சிறுபான்மை உரிமையை மதித்து நட!”, “மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையை நிறுத்து!” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டம் குறித்துக் கட்சியின் தலைவர் ந.தேவகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில்,

“ஒக்டோபர் புரட்சி நாளான ஒக்டோபர் 17ஆம் திகதி மற்றும் ரஷ்ய புரட்சியின் நினைவு நாளை முன்னிட்டும், இலங்கையில் நீடிக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை முற்றாக நீக்குதல் ஆகியவற்றை வலியுறுத்தியே இலங்கைக்கான சோசலிசக் கட்சி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்க வேண்டுமானால், முதற்கட்டமாக இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி, மாகாணங்களுக்கிடையிலான பொருளாதாரப் பங்களிப்பை உறுதிசெய்து, உள்ளூர் தன்னிறைவுப் பொருளாதாரத்தை வழிநடத்துவது அவசியமாகும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், காணி மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, சில நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இதுவரை நிலையான தீர்வை வழங்கவில்லை. மாறாக, மக்களின் நியாயமான கேள்விகளையும் போராட்டங்களையும் ஒடுக்குமுறை மூலமாகவே கையாள முற்படுகின்றது.” – என்று அவர் மேலும் குற்றம்சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.