நாடு தழுவிய திடீர் மின்தடை மாலை 6.30 மணிக்குள் சீரமைக்க நடவடிக்கை.
மின் பரிமாற்ற வலையமைப்பில் ஏற்பட்ட திடீர்க் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 6.30 மணியளவில் தேசிய மின் கட்டமைப்பை முழுமையாகச் சீரமைக்க முடியும் என்று தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் நாடு தழுவிய ரீதியில் திடீரென மின் விநியோகம் தடைப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணி முதல் மின் விநியோகத்தைப் படிப்படியாக மீட்டெடுக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, தேசிய மின் கட்டமைப்பு செயலிழந்ததால் நாட்டின் பல பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பரவி வரும் செய்திகளைத் தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மின் கட்டமைப்பு செயலிழப்பதற்கு முன்னர் இயங்கிக் கொண்டிருந்த அனைத்து நீர்மின் நிலையங்களும் தற்போது மீண்டும் வழமை போல் இயங்கி வருகின்றன என்றும், தேசிய மின் கட்டமைப்பை முழுமையாக மீட்டெடுக்கும் பணிகளுக்காக அந்த நீர்மின் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அந்தத் திணைக்களம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
