தேவி விருதுகள் 2026: ஹைதராபாதில் 10 பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவம்!
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் ஹைதராபாதில் நடைபெற்ற தேவி விருதுகள் விழாவில், 10 பெண் சாதனையாளர்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஹைதராபாதில் உள்ள ஐடிசி காகதியா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த விழாவில், விளையாட்டு, மருத்துவம், பாரம்பரியப் பாதுகாப்பு, கல்வி, திரைப்படம் மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 10 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவானது, இதுவரை 10 மாநிலங்களில் நடைபெற்ற 40 விழாக்களில், 480-க்கும் மேற்பட்ட பெண்கள் கெளரவப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தெலங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா, இத்தகைய முன்னெடுப்பைத் தொடர்ந்து நடத்தி வரும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைப் பாராட்டினார்.
தொடர்ந்து, “பெண்களுக்கு அதிகாரமளிக்க சமத்துவம், சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் ஆகியோர் விழாவுக்கு வந்தவர்களை வரவேற்று, விருது பெற்ற பெண்களைக் கௌரவித்தனர்.
நாடாளுமன்றத்தில் தாம் இருந்த காலத்திலிருந்தே பிரபு சாவ்லாவுடன் பழக்கம் இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், சமுதாயத்துக்கு பெண்கள் ஆற்றும் பங்களிப்புகளைத் தொடர்ந்து அங்கீகரித்து வரும் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பணியையும் அவர் பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாட்டின் கலாசாரத்தில், பெண் என்பவர் அறிவின் தெய்வமாகவும், வலிமையின் தெய்வமாகவும், சக்தியின் தெய்வமாகவும் கருதப்படுகிறார்.
அதே நேரத்தில், பெண்களை மதிப்பது என்பது வெறும் அடையாளங்களாக இல்லாமல், அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதன் மூலமும், வெளிப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், “பெண்களுக்கு சமத்துவம், சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் கண்ணியம் கிடைக்கும்போதுதான் அவர்களுக்கு உண்மையான மரியாதை கிடைக்கும். பெண்களுக்கு அதிகாரமளிப்பது சமூக நீதிக்காக மட்டுமல்ல; நாட்டின் வளர்ச்சிக்காகவும் அவசியமானது” என்று ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா தெரிவித்தார்.
தேவி விருது பெற்றோர்:
இந்தியாவின் முதல் பெண் மின் கம்ப ஊழியர் பப்புரி சிரிஷா, துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இஷா சிங், கண் மருத்துவர் டாக்டர் சிரிஷா செந்தில், ஹைதராபாதின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கப் பணியாற்றும் பி. அனுராதா ரெட்டி, கல்வி மற்றும் குழந்தைகள் நலனுக்காகப் பணியாற்றும் கல்வியாளர் பொம்பெல்லி பவானி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், நடிகையும் திரைப்படத் தயாரிப்பாளருமான நிஹாரிகா கொனிடேலா, கட்டடக் கலைஞரும் நீர்வளப் பாதுகாப்புச் செயல்பாட்டாளருமான கல்பனா ரமேஷ், தொழில்முனைவோர் வைஷாலி நியோட்டியா, ஹிந்துஸ்தானி கிளாசிகல் பாடகர் வித்யா ராவ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் யக்ஷி தீப்தி ரெட்டி ஆகியோருக்கும் தேவி விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
