உ.பி.-யில் ராகுல் காந்தியுடன் சென்ற வாகனம் விபத்து – பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் காயம்

புதுடெல்லி: ராகுல் காந்தி சென்ற வாகனத்துடன் சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியதை அடுத்து, அதில் பயணித்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் காயமடைந்துள்ளனர். எனினும், ராகுல் காந்தி பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2018 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அப்போதைய பாஜக தலைவரான அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறு பிரச்சாரம் செய்ததாக அவருக்கு எதிராக உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உத்தரப்பிரதேசத்தின் சுல்தான்பூரில் உள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராக ராகுல் காந்தி சென்று கொண்டிருந்தார். லக்னோவில் இருந்து சுல்தான்பூரை நோக்கி பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் ராகுல் காந்தி சென்று கொண்டிருந்தார். அவருடன் முன்னும் பின்னும் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.

இந்நிலையில், ராகுல் காந்தியின் வாகனத்துக்கப் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியது. இதன் காரணமாக அடுத்தடுத்து சில வாகனங்கள் மோதிக்கொண்டன. மொத்தம் 4 கார்களும் ஒரு ஆம்புலன்ஸும் விபத்தில் சிக்கி உள்ளன. இந்த விபத்தில் ராகுல் காந்தியுடன் பயணித்த காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் காயமடைந்துள்ளனர். அதேநேரத்தில், ராகுல் காந்தி பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுல்தான்பூர் மாவட்டத்தின் ஹாலியாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ், ராகுல் காந்தியின் கான்வாய் வாகனங்களில் ஒன்றா என்பது குறித்து தகவல் இல்லை. இந்த விபத்து நேர்ந்தபோது ராகுல் காந்தியின் வாகனம் வெகு தொலைவில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விபத்தை அடுத்து சுல்தான்பூரை நோக்கிய தனது பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.